மயிலாடுதுறை மகாதானத்தெருவைச் சேர்ந்தவர்கள் நீரஜ்ஜெயின்(44), பசந்தி ஜெயின்(40). ஜெயின் தம்பதியினரான இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவு மேற்கொள்ள முடிவெடுத்தனர். இவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் ஜெயின் துறவி ஆச்சாரிய குரு ராம்முனி முன்னிலையில் துறவு மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறை நகரில் வசிக்கும் 120 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 500-க்கு மேற்பட்ட ஜெயின் சமூக மக்கள் துறவு மேற்கொள்ள உள்ள தம்பதியினரை அவர்களது இல்லத்தில் இருந்து இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பக்தி பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து, மகாதானத்தெருவில் உள்ள தனியார் திருமணக்கூடம் ஒன்றில் அவர்களை போற்றி, பக்தி பாடல்களை பாடி மரியாதை செலுத்தினர். இல்வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, வீடு, சொத்து, குடும்பம், உறவுகளை விடுத்து துறவு வாழ்க்கையில் ஈடுபடவுள்ள தம்பதியினருக்கு மயிலாடுதுறை அனைத்து ஜெயின் சங்கங்கத்தினர் இணைந்து இந்த மரியாதையை செலுத்தினர்.