தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய துறைமுக பகுதிகளில் இருந்து கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலில் அதிவேக சூறைக்காற்று வீசியதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர்.
இதையடுத்து காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். அப்போது மீனவர்கள் வலையில் 150 கிலோ காளை மீன்கள் சிக்கியது. இந்த மீன்கள் அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் கிலோ ரூ.650க்கு ஏலம் எடுத்தனர்.
இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், காளை மீன் தற்போது சீசன் கிடையாது. மீனவர் வலையில் சிக்கிய மீன்களை ஏலத்திற்கு நாங்கள் எடுத்தோம். இந்த மீன்கள் கிலோ ரூ.450 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது என்றனர்.