வீரப்பனின் ‘சந்தனக்காடு’ தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் வ கௌதமன். மாபெரும் வெற்றிப்பெற்ற இந்த தொடருக்கு பிறகு ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கினார். இந்தப் படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவெளியில் ‘மாவீரா’ என்ற புதிய படத்தை வ கௌதமன் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் வ கெளதமனே கதாநாயகனாக நடிக்கிறார். இதுதவிர நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். பாலமுரளி வர்மன் வசனம் எழுத, ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றவுள்ளார்.
மண்ணையும், பெண்ணையும், மானத்தையும் காத்து வாழ்ந்த முந்திரிக்காட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. பரபரப்பு சம்பவங்களுடன் அதிரடி ஆக்சன் படமாக இப்படம் உருவாகும் என இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வி.கே.புரொக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் கெளதமன், ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இதையடுத்து விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.