கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த இரு அணைகளும் நிரம்பினால் தான் உபரி நீர் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு திறக்கப்படும்.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த உயரம் 124.80அடி. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.80 அடியாக உயர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 496 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடி. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 873 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் வினாடிக்கு 36 ஆயிரத்து 517 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் 2 அணைகளும் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி வெறும் 43 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 39.90 அடியாக குறைந்தது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இன்று காலை நிலவரப்படி கர்நாடகவில் உள்ள கே. ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 2,496 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை தமிழக எல்லைக்கு நாளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு கூட்டங்கள் பல முறை நடந்தும், தமிழகத்திற்கு மாதந்தோறும் கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க பரிந்துரைத்தும் கர்நாடகம் கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இயற்கை கருணை வைத்து மழை பெய்து அணையில் தேக்க முடியாத நிலை வந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் என்ற நிலையை கர்நாடக அரசு உருவாக்கி விட்டது. இதனால் தமிழகத்தின் வேளாண்மை, குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராவிட்டால் தமிழகத்தில் குடிநீர் பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆனால் தற்போது கர்நாடகத்தில் பருவமழை பரவலாக பெய்து வருவதால் இன்னும் ஒருவாரத்தில் தமிழகத்திற்க கணிசமான அளவு தண்ணீர் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.