தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து தரவரிசை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2024 ம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் தரவரிசை பட்டியலில் தமிழக அளவில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தை பெற்று மாநகராட்சி மேயர் அன்பழகன், அப்போதைய மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் கடந்த 11. 01.2024 ம் தேதி டில்லி சென்று விருது பெற்று வந்தனர்.
ஆனால் பெயரளவில் மட்டுமே இந்த விருது திருச்சி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியின் தினம் தினம் சேரக்கூடிய குப்பைகளை ஒவ்வொரு தெருவிலும் சுத்தம் செய்யும்போது ஒரு பணியாளர் வந்து குப்பைகளை கூட்டி ஒரு இடத்தில் சேகரித்து வைத்துவிட்டு குப்பைகளை அள்ளாமல் சென்று விடுகிறார். அந்த குப்பையை எடுக்க வேறு ஒரு நபர் வருவார் எனக் கூறிவிட்டு செல்கிறார். ஆனால் யாரும் வருவது கிடையாது.
கூட்டிய குப்பைகள் ஒரே இடத்தில் சுமார் 4,5 நாட்கள் அப்படியே கிடக்கிறது. பின்னர் காற்றில் அந்த குப்பைகள் தெரு முழுவதும் பறந்து தெரு முழுக்க குப்பை காடாக மாறிவிடுகிறது. குப்பைகளை அள்ளுவதற்கு என ஒவ்வொரு வார்டிலும் தனியாக ஒரு மேற்பார்வையாளர் பணி அமர்த்தியும் அவர்கள்அந்த பணிகளை சரியாக செய்யாமல் இருந்து வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியின் 50 வது வார்டு எல்லைக்குட்பட்ட செங்குளம் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாசலில் சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக குப்பைகள் அள்ளாமல் கிடக்கிறது. இது குறித்து அந்த வார்டின் மேற்பார்வையாளர் சுப்ரமணி என்பவரிடம் கூறியும் குப்பைகளை அப்புறப்படுத்தப்படவில்லை. அந்த வார்டு கவுன்சிலர் ரிஸ்வானா பானுவிடமும் இது குறித்து தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியான ரிஸ்வானா பானு இதற்கு என்ன சொல்லப் போகிறார்.. மாநகராட்சி மேயர் அன்பழகன் தான் என்ன சொல்ல போகிறார்? இதுதான் தூய்மையான மாநகராட்சி என விருது பெற்ற மாநகராட்சியா? என பொதுமக்களும் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்களும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார்கள்.