தலைநகர் டில்லியில் கடந்த 2 மாதங்களாக கடுமையான கோடை வாட்டி வதைத்த்தது. குடிநீருக்காக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் டில்லியில் நேற்று கனமழை கொட்டியது. நேற்று இரவும், இன்று அதிகாலையிலும் மழை தொடர்ந்து கொட்டியது. பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக டில்லி விமான நிலைய மேற்கூரை இன்று அதிகாலை விழுந்து 3 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டில்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.