அரியலூர் மாவட்டம் உதயநத்தம் கிராமத்தில் உள்ள வடக்கு தெரு, தெற்குதெரு, மெயின் ரோட்டு தெரு, புதுத்தெரு பஜனமடத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீழத்தெரு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அந்த போர்வெல் கடந்த 10 மாதத்திற்கு முன்பு பழுதானது. இதனால் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் தற்பொழுது குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த போரும் தற்பொழுது பழுதாகி விட்டது.
கடந்த ஆறு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள ஐயப்பன் தெருவிற்கு சென்று பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், உதயநத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே, சிலால் – அணைக்கரை மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சிலால் -அணைக்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றை சரி செய்து குடி நீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில், பெண்கள் தங்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.