தென் மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன்,ஜூலை மாதங்களில் பெய்வது வழக்கம். அதேபோல இந்தாண்டும் பருவமழை பரவலாக கேரளாவில் பெய்து வருகிறது. இந்த பருவமழையின் தாக்கத்தினால், மேற்கு தொடர்ச்சி மலையான நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், இன்று கலை பில்லூர் அணை முழு கொள்ளளவான 97 அடியை எட்டியது. இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருத்தி காலை 5 மணியளவில் வினாடிக்கு 9ஆயிரம் கனஅடிவீதம் மேட்டுபாளையம் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 14,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டுபாளையம் பவானி ஆற்றின் கரையோரப்பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து ஆற்றங்கரை பகுதிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.