கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து சென்னைக்கு சென்ற ஒரு ஆம்னி பஸ் இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் வாவரை பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன் அமர்நாத் (36) பஸ்சை ஓட்டி சென்றார்.
பாடாலூர் தனியார் பள்ளி அருகே ஆம்னி பஸ் வந்த போது, திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலம் பணிக்காக தோண்டப்பட்ட சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பஸ்ஸில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மருதங்கோடு என்ற பகுதியை சேர்ந்த ரெத்தினன் மகன் அஜின் மோன் (25) பரிதாபமாக இறந்தார். மற்றும் 10பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாடாலூா் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.