மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் குளறுபடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதி உள்ள கடிதத்தில்… நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இது மாணவர்களின் இயல்புநிலை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும். மருத்துவப் படிப்புகளுக்கு முன்பு இருந்ததைப் போல, மாநிலத் தேர்வு நடைமுறையை கொண்டு வர வேண்டும். இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் ஊழல் நடந்துள்ளது. நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையச் செய்யும் வகையில் உள்ளது. மாநில அரசு பொதுவாக ஒரு மருத்துவருக்கு கல்வி மற்றும் பயிற்சிக்காக ரூ.50 லட்சத்துக்கு மேல் செலவிடுகிறது. இவ்வாறு கடிதத்தில் மம்தா கூறியுள்ளார்.