பெண் காவலர்கள், காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெலிக்ஸ் ஜெரால்டு தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஒரே சம்பவத்துக்காக பல வழக்குகளைப் போலீசார் உள்நோக்கத்துடன் பதிவு செய்துள்ளனர். பெண் போலீசாரை இழிவுபடுத்தும் வகையில், தான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. நடந்த செயலுக்காகத் தான் மன்னிப்பு கோரி விட்ட நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்,” என வாதிடப்பட்டது.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு தரப்பில், “சவுக்கு சங்கர் உடனான அந்த பேட்டியில் மனுதாரர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கேள்விகளை கேட்டார். காவல் துறையில் உள்ள பெண் அதிகாரிகளையும், பெண் போலீசாரை இழிவுபடுத்தும் நோக்கில் உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு அந்த நேர்காணலில் பேசப்பட்டது. மனுதாரர், இதுபோன்று செயல்படுவதை தொடர்ந்து வாடிக்கையாக வைத்திருக்கிறார். சவுக்கு சங்கரை தூண்டி விட்டதே இவர்தான்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, “அந்தப் பேட்டியில் மனுதாரரின் கேள்வியில் உள்நோக்கம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. பிரச்சினையைத் தூண்டும் வகையில் அவருடைய கேள்வி உள்ளது. மனுதாரர் ஒன்றும் பாமரர் கிடையாது. நன்கு படித்தவர் என்பதால் அவருக்கு தற்போதைய சூழலில் ஜாமின் வழங்க முடியாது என தீர்ப்பு அளித்தார்.