உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் கிருபா சங்கர் கண்ணுாஜியா(54). இவர், 2021ல், உன்னாவ் போலீஸ் சரகத்தில் டிஎஸ்பியாக இருந்தார். அப்போது, ஒருநாள் விடுமுறையில் சென்ற டிஎஸ்பி கிருபா சங்கர் வீட்டிற்கு செல்லவில்லை. அன்றைய தினம் டிஎஸ்பியான தனது கணவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் என்னவென்று தெரியவில்லை என கிருபா சங்கரின் மனைவி உன்னாவ் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் அவரை மொபைல் போன் டவரை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது தான் டிஎஸ்பி கிருபா சங்கர் வீட்டுக்கு செல்லாமல் கான்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருப்பது தெரியவந்தது. யாரும் மர்ம நபர்கள் டிஎஸ்பியை கடத்தி இருப்பார்களோ? என்கிற சந்தேகத்தின் பேரில் உடனடியாக கான்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பதறியபடி சென்ற போலீசார் ஓட்டலின் ரூமை கதவை தட்டியபோது தன்னுடன் பணிபுரியும் பெண் கான்ஸ்டபிளுடன், டிஎஸ்பி கிருபா சங்கர் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கையும் களவுமாக மாட்டிக்கொண்ட டிஎஸ்பி கிருபா சங்கர் கண்ணூஜியா மீது துறை ரீதியான விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. இதன் முடிவில், டி.எஸ்.பி.,யாக பணியில் இருந்த கிருபா சங்கர், கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய லக்னோ ஐ.ஜி., பரிந்துரைத்தார். இதையடுத்து, கோரக்பூர் ஆயுதப் படைப் பிரிவின் கான்ஸ்டபிளாக அவர் தற்போது நியமிக்கப்பட்டு உள்ளார்.