கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக சார்பில் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் மாவட்ட தலைவர் சதீஸ் தலைமையில் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
முன்னதாக கும்பகோணம் ரெயில் நிலையம் அருகே இருந்து புறப்பட்டு பாஜக வினர் முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சன்னதி தெருவிற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு காந்தி பூங்காவிற்கு வந்தடைந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட தலைவர் சதீஸ், துணை தலைவர்கள் வேதசெல்வம், தங்க கென்னடி, மண்டல நிர்வாகிகள் வாசு, வெங்கட்ராமன், வேதமுரளி, வக்கீல் பிரிவு பொறுப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் 5 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
முன்னதாக காமராஜர் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக்கடையில் மதுபானங்களை வாங்கிய பா.ஜ.க.வினர் அதனை அருகில் உள்ள மோரீ வாய்க்காலில் ஊற்றினர். மேலும் தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்கவேண்டும் என்றும், டாஸ்மாக்கடைகளை மூடவேண்டும் என்றும், கள்ளசாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.