தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர் விமலநாதன் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை டிஜிட்டல் மூலம் பரிசோதிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,‛நாடு முழுவதும் டிஜிட்டல் மூலம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பரிசோதிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை உடைசலான ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. வட மாநிலங்களுக்குத் தான் புதிய நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், பராமரிப்பில் தொடர்ந்து காட்டும் அலட்சியம் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.பல்வேறு ரயில்களில் பயணிகளுக்கான சேவை படு மோசமாக உள்ளது . ரயிலை முறையாக பராமரியுங்கள் என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.