அரியலூர் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் 20.06.2024 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டிமடம் வட்டத்திற்கான இரண்டாம் நாள் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், 1433-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் முதல் நாளில் குவாகம் உள்வட்டத்திற்குட்பட்ட சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையக்குறிச்சி, அய்யூர், கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர் (தெற்கு), காட்டாத்தூர் (வடக்கு), காட்டாத்தூர் (தெற்கு) ஆகிய 8 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 438 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஆண்டிமடம் உள்வட்டத்திற்கான வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் நேற்றைய தினம் பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுடைய 15 நபர்களுக்கு பட்டாமாறுதல், உட்பிரிவு ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். முன்னதாக நில அளவை அலுவலர்கள் பயன்படுத்தும் நில அளவை கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஆண்டிமடம் வட்டத்திற்கு 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தின் கடைசி நாளான நேற்றைய தினம் விவசாய குடிகள் மாநாடு ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ரவி, மாவட்ட ஆட்சியரக மேலாளர்(பொது) குமரையா வட்டாட்சியர் இளவரசன், துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.