போலி சான்று கொடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ரகு, சித்தார்த், செல்வராஜ் உட்பட 7 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் கரூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் 7 பேர்கள் மீது மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன் பெயரை சேர்க்கப்படும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த முன்ஜாமீன் மனு விசாரணை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று 21ம் தேதி நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்கள் காரசாரமாக சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்டுக் கொண்ட நீதிபதி வரும் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறினார்.
இதன் காரணமாக தன்னை எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு நபர்கள் தலைமறைவாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி மற்றும் கூட்டு சதி தொடர்பான இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும், சொத்தை எழுதி தந்த சோபனாவின் தந்தை கரூர் வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை சொத்தை எழுதிக் கொடுக்குமாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது ஆதரவாளர்களும் துன்புறுத்தியதாகவும் தாக்கியதாகவும் கூறி முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.