டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக மார்ச் 21ம் தேதி டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னதாக கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்சிங் மூலம் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமின் மனு, நேற்று விடுமுறை கால அமர்வு நீதிபதி நியாய் பிந்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியும், ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று, அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இதனை அவசர வழக்காக இன்று விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதிர்குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர துடேஜா அமர்வு, கெஜ்ரிவாலுக்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அமலாக்கத்துறை தனது மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று விடுமுறைக்கால அமர்வு முன்பு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை ஜாமின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.