வெஸ்ட் இண்டீசின் பார்படாசில் (பிரிட்ஜ்டவுன்) உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்திய ‘லெவன்’ அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் இடம்பிடித்தார்.ஆப்கானிஸ்தான் ‘லெவன்’ அணியில் கரீம் ஜனத்துக்கு பதிலாக ஹஜ்ரதுல்லா ஜஜாய் தேர்வானார். ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (8) சோபிக்கவில்லை. பின் இணைந்த கோலி, ரிஷாப் பன்ட் ஜோடி நம்பிக்கை தந்தது. நவீன்-உல்-ஹக் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் கோலி. முகமது நபி வீசிய 6வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார் பன்ட். ‘பவர்-பிளே’ ஓவரின் முடிவில் இந்திய அணி 47/1 ரன் எடுத்திருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது ரஷித் கான் ‘சுழலில்’ பன்ட் (20) சிக்கினார். தொடர்ந்து அசத்திய ரஷித் பந்தில் கோலி (24) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் (செல்லமாக சூர்யா), ரஷித் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் அசத்திய ஷிவம் துபே, நுார் அகமது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். ரஷித் வீசிய 11வது ஓவரில் சூர்யகுமார் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ரஷித் பந்தில் துபே (10) அவுட்டானார். அஸ்மதுல்லா உமர்ஜாய் வீசிய 13வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய சூர்யகுமார், உமர்ஜாய் வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஹர்திக் பாண்ட்யா, நுார் அகமது வீசிய 16வது ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். பரூக்கி பந்தில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சூர்யகுமார், 27 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா (32) ஓரளவு கைகொடுத்தார். ரவிந்திர ஜடேஜா (7) நிலைக்கவில்லை. நவீன் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்த அக்சர் (12) ‘ரன்-அவுட்’ ஆனார். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, பும்ரா தொல்லை தந்தார். இவரது வேகத்தில், ரஹ்மானுல்லா குர்பாஸ்(11), ஹஜ்ரதுல்லா ஜஜாய்(2) வெளியேறினர். அக்சர் படேல் சுழலில், ஜத்ரன்(8) சிக்கினார். குல்தீப் பந்தில் குல்புதீன் நைப்(17), முகமது நபி(14) அவுட்டாகினர். உமர்ஜாய்(26) ஆறுதல் தந்தார். தொடர்ந்து அசத்திய பும்ரா, ஜத்ரனை(19) அவுட்டாக்கினார். அர்ஷ்தீப் சிங் பந்தில், கேப்டன் ரஷித் கான்(2), நவீன் உல் ஹக்(0), நூர் அகமது(12) ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவரில், 134 ரன்னுக்கு ஆல்அவுட் ஆகி, தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக, பேட்டிங்கில் அசத்திய சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.