தஞ்சாவூரில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பாரம் நடைமேடையில் உள்ள ரயில்வே ஊழியர்கள் ஓய்வு அறை, ரயில்வே கோர்ட் உள்ள பழமையான கட்டடத்தில் அமைக்கப்பட்டு இருந்த 100 அடி தகர சீட் காற்றில் பெயர்ந்து இரண்டு மற்றும் முதல் பிளாட்பாரம், தண்டவாளத்தில் விழுந்தது. இதில் ரயில் எலக்ட்ரிக் ஒயர் அறுந்து சேதமடைந்தன. இரண்டாவது தண்டவாளத்தில் ஏற்கனவே பாரமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
முதல் பிளாட்பாரத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்கள் நான்காவது பிளாட்பாரம் வழியாகவும், கும்பகோணம்,மயிலாடுதுறை மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்கள் மூன்றாவது பிளாட்பாரத்தின் வழியாக இயக்கப்பட்டது.
தண்டவாளத்தில் விழுந்த தகரசீட்டுகளை ரயில்வே பணியாளர்கள் சுமார் இரண்டரை மணி நேர்ததிற்கு பிறகு அகற்றினர். அறுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தினை அறிந்து வந்த தஞ்சாவூர் தி.மு.க., எம்.பி., முரசொலி ரயில்வே அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.