சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. ரிசர்வேசன் இல்லாமல் இயக்கப்படும் இந்த ரயில், சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி-திண்டுக்கல் இடையே வந்து கொண்டிருந்த போது, ஒருவர் டிக்கெட் பரிசோதகரை போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஆனால், அந்த ரயிலுக்கு அந்த வழித்தடத்தில் டிக்கெட் பரிசோதனை செய்ய மதுரையை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் சரவண செல்வி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். தனக்கு பதிலாக வேறு ஒருவர் ரயிலில் டிக்கெட் பரிசோதனை செய்ததை கவனித்த்த சரவண செல்வி மதுரையில் உள்ள வர்த்தக பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடந்து மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த டிக்கெட் பரிசோதகரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் போலி டிக்கெட் பரிசோதகர் என்பதும் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. பின்னர் மதுரையில் உள்ள ஆர்பிஎப் போலீசாரிடம் மணிகண்டன் ஓப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.