தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் வடக்கு முஸ்லீம் தெருவைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மகன் சிராஜ் (19). மாரியம்மன் கோவில் சாலிய தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் வெங்கடேசன் (27), விஜய் (25) ஆகியோர் அம்மாபேட்டை பகுதியிலுள்ள ஒரு தோப்பில் நேற்றுமுன்தினம் மாலை குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இவர்களுக்கும், அங்கு குளிக்க வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குவாதம் முற்றி தகராறும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் தங்களின் பைக்கில் அங்கிருந்து தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டனர். இவர்களை சிராஜ், விஜய் ஒரு பைக்கிலும், வெங்கடேசன் மற்றொரு பைக்கிலும் விரட்டிச் சென்றனர். அப்போது மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, சிராஜ், விஜய் வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் கீழே விழுந்தனர். இவர்களுக்கு பின்னால் வந்த வெங்கடேசனின் பைக்கும் இதனால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த சிராஜ், வெங்கடேசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விஜய் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.