தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குதிரையேற்றம் பயிற்சி மையம் உள்ளது. இதை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (41), என்பவர் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (26) என்பவர் இங்கு பயிற்சியாளராக உள்ளார்.
இந்த குதிரையேற்றம் பயிற்சி மையத்தில், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக 14 வயது சிறுமி பயிற்சி பெற்று வந்தார். கடந்த சில மாதங்களாக பயிற்சி நேரம் முடிந்த பிறகு, அந்த சிறுமியை மட்டும் கூடுதல் நேரம் இருக்கச்சொல்லி தமிழரசன் பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அந்த 14 வயது சிறுமிக்கு அடிக்கடி போன் மூலமாகவும் பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் தமிழரசனின் டார்ச்சர் முற்றிய நிலையில் அந்த சிறுதி தனது தந்தையான டாக்டரிடம் இதுபற்றி கூறி அழுதுள்ளார். தொடர்ந்து குதிரை பயிற்சி மைய உரிமையாளர் ராஜ்குமாரை சந்தித்த அந்த டாக்டர் தனது மகளுக்கு பயிற்சியாளர் குறித்து கூறி கண்டித்தார். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளாமல் தமிழரசனுடன் சேர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் வெளியில் சொன்னால் அசிங்கப்படுத்தி விடுவோம் என கூறி பேரம் பேசியுள்ளார்.
இதையடுத்து அந்த டாக்டர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) வனிதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பயிற்சி மைய உரிமையாளர் ராஜ்குமார், பயிற்சியாளர் தமிழரசன் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.