இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் திருநாள் ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளை தியாகத்திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் தெரிவித்தனர். திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. புதுக்கோட்டை ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் அப்துல்லா எம்.பி. பங்கேற்றார்.
திருச்சியில் உழவர் சந்தை மைதானம், ஈத்கா மைதானம் உள்பட பல் இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். பக்ரீத் பெருநாளில்ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள். மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபகோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அமராவதி பாலம் அருகே அமைந்துள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் மதர்சா பாபு தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை மேற்கொண்டனர்.
திருச்சி சையது முதர்ஷா பள்ளி விளையாட்டு மைதானத்தில் இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்த தொழுகையில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
நாட்டில் அன்பு, அமைதி தழைக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மக்களிடையே எந்த பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என தொழுகை செ்யததாக இஸ்லாமிய பெருமக்கள் தெரிவித்தனர்.