Skip to content
Home » பாபர் மசூதி இடிப்பு ………பாடப்பகுதி நீக்கம் ஏன்? என்.சி.இ.ஆர்.டி. தலைவர் விளக்கம்

பாபர் மசூதி இடிப்பு ………பாடப்பகுதி நீக்கம் ஏன்? என்.சி.இ.ஆர்.டி. தலைவர் விளக்கம்

  • by Senthil

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) தயாரித்த 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், குஜராத் கலவரம் பற்றிய பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி, ‘3 குவிமாடம் கொண்ட கட்டுமானம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பா.ஜனதா நடத்திய ரத யாத்திரை, கரசேவகர்கள் செயல்பாடுகள், மசூதி இடிப்பு, பா.ஜனதா அரசுகள் டிஸ்மிஸ், கலவரம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.

அயோத்தி பற்றிய பகுதிகள், 4 பக்கங்களில் இருந்து 2 பக்கங்களாக சுருக்கப்பட்டுள்ளது. முந்தைய விரிவான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வழிவகுத்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முகலாய மன்னர்கள் அக்பர், ஹுமாயுன், ஷாஜகான், அவுரங்கசீப், ஜஹாங்கீர் ஆகியோரின் சாதனைகள் பற்றிய 2 பக்க பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் தினேஷ் பிரசாத் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டது குறித்து அவர் கூறியதாவது:

பள்ளிகளில் ஏன் வன்முறை பற்றி கற்பிக்க வேண்டும்?. நாங்கள் ஆக்கப்பூர்வமான மனிதர்களைத்தான் உருவாக்க விரும்புகிறோம். வன்முறை மனநிலையும், மனச்சோர்வும் கொண்ட மனிதர்களை அல்ல.வன்முறையை பற்றி கற்பிப்பது எங்கள் நோக்கம் அல்ல. வளர்ந்த பிறகு மாணவர்களே அதைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். என்ன நடந்தது, ஏன் நடந்தது என  புரிந்து கொள்வார்கள்.

1984-ம் ஆண்டு நடந்த கலவரம் பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டபோது இதுபோன்ற ஆட்சேபனை எழுந்தது இல்லை. எனவே, தற்போதைய எதிர்ப்பு தேவையற்றது.மேலும், பாடப்புத்தக மாற்றம் என்பது உலகம் முழுவதும் நடக்கும் நடவடிக்கை. இது ஆண்டுதோறும் நடக்கிறது. இதை மேலே இருந்து யாரும் திணிப்பது இல்லை. கல்வி நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்கிறது.

மேலும், இதை காவிமயமாக்குதல் என்பது தவறு. நடந்த உண்மைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வரலாற்றை சொல்லித் தருகிறோம். அது எப்படி காவிமயமாக்குவது ஆகும்?சில தகவல்கள் பொருத்தமற்றவையாக மாறும்போது, அவை நீக்கப்படுகின்றன. புதிய தகவல்கள் சேர்க்கப்படுகின்றன. கொரோனா காலத்தில், மாணவர்களின் சுமையை குறைக்க சில பகுதிகள் நீக்கப்பட்டன. அதுபோல்தான் எல்லா நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!