மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட குளங்கள் மற்றும் பூங்காக்களை தன்னார்வ அமைப்புகள் மூலம் பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்கு உட்பட்ட 12 குளங்கள் மற்றும் 6 பூங்காக்களை தன்னார்வலர்கள் பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பிரச்சனை மற்றும் குப்பை பிரச்சனை பெரிய அளவில் உள்ளதாக குற்றம் சாட்டினர். பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யவும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். பொதுமக்களின் குறைகளை கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், குப்பை பிரச்சனைக்குகூட மாவட்ட ஆட்சியரே நேரில் தலையிட்டு தான் தீர்க்க வேண்டுமா என ஒப்பந்ததாரர் பணியை திறம்பட செய்ய வேண்டாமா என்று அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கடிந்து கொண்டார். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் திட்டங்களை முறையாக நிறைவேற்றவும் புதிய திட்டங்களை பெறமுடியும் என்றார். மேலும் அதிகாரிகளிடம் விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.