மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் மனைவி நிவேதா. இவர் ஜூன் 11-ஆம் தேதி மயிலாடுதுறையில் இருசக்கர விற்பனை நிறுவனம் ஒன்றில் கணவர் குமார் பெயரில் இருசக்கர வாகனத்தை தனியார் வங்கியில் 24 மாதம் பணம் செலுத்துவதாக ஒப்பந்தத்தின்படி ரூ.6,900 முன்பணம் கட்டி கடனுக்கு வாகனத்தை வாங்கியுள்ளார். ஏற்கனவே குமார் இருசக்கர வாகனம் வாங்கி பணம் செலுத்தாதது தெரியவந்ததால் வாகனத்தை திருப்பி ஒப்படைக்கும்படி டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். ஆனால், குமார் வாகனத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில் ஆனந்ததாண்டவபுரம் என்ற ஊரில் நிவேதா இருசக்கரவாகனத்தில் சென்றபோது சௌந்தர்ராஜன் வழிமறித்து தாக்கி நிவேதாவின் ஆடை கிழிந்ததுடன், கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிவேதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், அதிக வாகனங்களை விற்பனை செய்வதற்காக, ஆவணங்களை சரிபார்க்காமல் வாகனத்தை கொடுத்துவிட்டு அதன்பின்னர் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சௌந்தர்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சௌந்தராஜன் உள்ளிட்ட இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாகன விற்பனையகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.