விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து விட்ட நிலையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக-பாமக கூட்டணி சார்பில் சி. அன்புமணி, நாம்தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முக்கிய எதிர்கட்சியான அதிமுக எப்போது வேட்பாளரை அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூத்த நிர்வாகிகள் சிவி சண்முகம், ஜெயக்குமார் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படாதது குறித்து சிவி சண்முகம் கடும் அதிருப்தியை தெரிவித்தாக தெரிகிறது. அவரை மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்துள்ளனர். பின்னர் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது எடப்பாடி யாரை நிறுத்தலாம் என சிவி சண்முகத்திடம் கேட்டுள்ளார். அப்போது சிவி சண்முகம் இடைத்தேர்தலை வேறு ஆட்களை வைத்து நடத்துக்கொள்ளுமாறு கோபமாக கூறியிருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியடைந்தாகவும் மற்ற நிர்வாகிகள் சிவி சண்முகத்தை சமாதானம் செய்தும் அவர் சமாதானம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் கூட்டணி விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகிய விவகாரங்களில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது விக்கிரவாண்டி தேர்தலில் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் தேர்தல் புறக்கணிப்பு என்கிற முடிவு வட மாவட்டங்களில் அதிமுக தொண்டர்களுக்கு மத்தியில் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது…
