Skip to content
Home » கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

  • by Senthil

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மெண்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக கடந்த ஏப். 6ம் தேதி பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் ஆகிய 4 பேர் வந்திருந்தனர். இந்த சொத்து வெள்ளியணை சார்பதிவக எல்லைக்குட்பட்டது என்பதாலும், சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததால் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது. அதன் பிறகு அசல் ஆவணம் தொலைந்து விட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ் மற்றும் பிரவீண் ஆகியோர் நேரில் என்னிடம் அளித்தனர்.

வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிப்பறிக்கை பெற்று கடந்த மே 10ம் தேதி மேற்படி சொத்து சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. மறுநாள் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் போலியான நான் ட்ரேஷபில் (கண்டு பிடிக்க முடியவில்லை) சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனு அளித்தார்.

கரூர் மாவட்ட பதிவாளருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரிடம் இருந்து வரப்பெற்ற கருத்துரு தகவல், வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் இதுபோன்ற நான் ட்ரேஷபில் சான்றிதழ் கொடுக்கவில்லை. எனவே பத்திரப் பதிவுக்கு கொடுக்கப்பட்ட நான் ட்ரேஷபில் சான்றிதழ் போலியானது  என உறுதியானது. எனவே கூட்டு சதி செய்து, சொத்தை அபகரித்து பதிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டபோது யுவராஜ், பிரவீண் ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கரூர் நகர காவல் நிலையத்தில் மனு அளித்தார்.

இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த 9ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் பெயர் இல்லாத நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இவ்வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்பதால் கரூர் மாவட்ட முதன்மை அமர்நு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் வழக்கு விசாரணையை (ஜூன் 15) ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது இந்த முன் ஜாமின் மனுவை விசாரித்தார் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் வரும் 19- ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!