மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் பூங்குன்றன்.. தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளார். இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவு அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அதன் விபரம்..
கழகம் ஒன்றுபட வேண்டும் என்று சொன்னால் பலருக்கு பிடிக்கவில்லை. கழகம் கட்டுக்கோப்பாகத்தான் இருக்கிறது. இவர் எதற்கு தேவையில்லாமல் பேசுகிறார் என்கிறார்கள். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அப்படி வெற்றியை ருசித்துவிட்டால் ஒற்றுமை குறித்து யாரும் வாயை மெல்லமாட்டார்கள். கழகம் நன்றாக வரவேண்டும் என்று தொண்டர்களும், மக்களும் ஏன் மாற்றுக் கட்சியினரும் கூட பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நமக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கழகம் வலிமையாக இருக்க வேண்டும் என்பது தான் என்னைப் போன்ற தொண்டர்களின் ஆசை. நீங்கள் ஒன்றுபட்டாலும், இல்லை என்றாலும் கழகத்தை வலிமையாக வைத்துக் கொள்ளுங்கள். தொண்டர்களை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெற்றால் எனக்கா முதலமைச்சர் பதவியை தரப் போகிறீர்கள். நீங்கள் தானே அனுபவிக்கப் போகிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா..! குறை சொல்வதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆலோசனையாக எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கடந்து செல்லுங்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக மிகப்பெரிய பொறுப்பில் மரியாதைக்குரிய எடப்பாடியார் அவர்கள் இருந்து வருகிறார்கள். பொதுச்செயலாளர் அவர்கள் அரசியலில் பழுத்தவர். அவருக்கு எல்லாம் தெரியும். இருந்தாலும் கழகத்தின் நலன் கருதி அவரிடம் எனது அன்பான வேண்டுகோள்..! தாங்கள் சென்னையில் தங்க வேண்டும். சென்னையில் இருந்து அரசியல் செய்ய வேண்டும். உங்களது பேட்டியை தலைமைக் கழகத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும். அடிக்கடி தலைமைக் கழகத்திற்கு தாங்கள் செல்ல வேண்டும். தொண்டர்களை சந்திக்க வேண்டும். இது என்னுடைய தாழ்மையான விண்ணப்பம். உங்களிடம் பதவிக்காக உண்மையை சொல்ல பலர் தயங்குவார்கள். நான் இரும்புப் பெண்மணியிடமே என் மனதில் தோன்றியதை தயக்கமில்லாமல் சொல்லி இருக்கிறேன். அதை அவர்கள் பாராட்டியும் இருக்கிறார்கள். கழகத்தினர் குறித்து என்னிடம் இருந்து நிறைய தகவல்களை அன்பாகப் பேசி கேட்டும் இருக்கிறார்கள். என்னைப் பற்றி உங்களுக்கும் நன்றாகத் தெரியும். நீங்கள் நன்றாக இருந்தால்தான் கழகம் நன்றாக இருக்கும். அதனால் தான் இதனை நான் சொல்கிறேன். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வது கழகத்தின் நன்மை கருதியே! பலர் சொல்லத் தயங்குவதை நான் சொல்லக் காரணம் உங்கள் நலன் கருதியே..!
இவ்வாறு பூங்குன்றன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்…