ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா மேடையில் தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரிடம் ஏதோ சீரியஸாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து தமிழிசை கூறியதாவது: சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா அறிவுரை தான் கூறினார். தொகுதி மற்றும் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய பணிகள், தேர்தலில் மேற்கொண்ட சவால்கள் குறித்து கேட்டறிந்தார். இவ்வாறு அவர் விளக்கம் அளித்து உள்ளார்.
இந்நிலையில், தமிழிசையை அவரது வீட்டில் அண்ணாமலை சந்தித்து பேசினார்.இது தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பா.ஜ., தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜ.வின் தலைவராக திறம்பட செயல்பட்டவருமான அக்கா தமிழிசையை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த தமிழிசையின் அரசியல் அனுபவம், ஆலோசனைகளும் கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/தமிழிசை-அண்ணாமலை.jpg)