அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து 38 நாட்கள் ஆகிறது. சங்கீதா உட்கோட்டையில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இன்று அதிகாலையில் தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, தானும் தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது, அருகில் குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு பின்புறம் சென்று பார்த்தபோது, அங்கு இருந்த தண்ணீர் பேரலில், போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குழந்தையின் இறப்பு குறித்து போலீசார், விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையின் தாத்தா பாட்டியான வீரமுத்து, ரேவதியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பிறந்து 38 நாட்களே ஆன ஆண் சிசு தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.