குவைத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 7 மாடிகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 196 பேர் தங்கியிருந்தனர். பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு இந்த குடியிருப்பின் தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்தது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீப்பற்றிக்கொண்டது. இந்த விபத்தில் தீயில் கருகியும், மூச்சு திணறியும் 49 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் தப்பினர் அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளை குவைத் அதிகாரிகள் மேற்கொண்டனர். இதில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. மரபணு பரிசோதனை மூலம் இதை உறுதி செய்துள்ள அதிகாரிகள், அவற்றை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர்.
இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதேபோல் இந்த தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர விமானப்படைக்கு சொந்தமான சி 130 என்ற அந்த விமானம் குவைத் சென்றது. இன்று காலை பலியான இந்தியர்களின் உடல்களை எடுத்துக் கொண்டு விமானம் கொச்சி புறப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் 31 உடல்களும் வைக்கப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்படும். பின்னர் அங்கிருந்து 7 உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதற்காக நேற்று இரவே ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலையிலேயே விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு ஆம்புலன்ஸ்சுக்கும் 2 டிரைவர்கள் வீதம் அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அங்கு தயார் நிலையில் இருந்தனர்.
இந்த விமானத்திலேயே தமிழ்நாட்டைச்சேர்ந்த 7 பேரின் உடல்களும் வருகிறது. அவற்றை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர தமிழக அமைச்சர் மஸ்தான் கொச்சி சென்றுள்ளார். அவர் தமிழர்களின் உடல்களை பெற்றுக்கொண்டு வருவார்.