மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ” என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை ஒருநாள் வட்டம் அளவில் தங்கி களஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வுசெய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும்என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் ஜுன்-2024ம் மாதத்திற்கான “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், ஆண்டிமடம் வட்டத்தில் வருகிற 19ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி 20ம் தேதி காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைச்சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள்/ சேவைகள் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.
இதன்படி 18ம் தேதி வரை பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் என்று குறிப்பிட்டு மனுக்களை ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் 19ம் தேதி மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின் போதும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.