குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவை சேர்ந்த 11 பேர் இந்த விபத்தில் இறந்தது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் உடலை கேரளா கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடக்கிறது.
காயமடைந்தவர்களுக்கு உதவ, சடலங்களை கொண்டுவரும் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்புக் குழு அனுப்ப திட்டம்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசின் சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டிடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அலசும் போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர்களில் 92 பேர் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் இரவு ஷிப்ட் என்பதால் பணிக்கு சென்றுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் என்பிடிசி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தங்கி இருந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை 4 மணி என்பதால் பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரிகிறது. தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்று உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கு என்பிடிசி நிறுவனம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரின் பேராசை தான் காரணம் என பாதுகாப்பு துறை அமைச்சரும், துணை பிரதமருமான ஷேக் ஃபகத் அல் யூசுப் அல் சபா தெரிவித்துள்ளார்.