அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் ரேசன் கடையில் அரிசி, பாமாயில், சீனி உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு சரிவர விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரியும் விற்பனையாளர் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து முறை கேட்டில் ஈடுபடுவதாகவும், இதை தட்டி கேட்கும் மக்களை அவர் அலைகழிப்பு செய்வதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில், வழக்கம்போல் ரேஷன் கடைக்கு சென்ற மக்களிடம் ரேஷன் பொருட்கள் இல்லை எனவும், அவர்களிடம் அநாகரிகமாக பேசியதாகவும் தெரிகிறது.
இதில் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிரச்சனைக்குரிய விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதே நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரித்தனர். ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் நடத்திய முற்றுகை போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.