Skip to content
Home » எந்த தொகுதியை ராஜினாமா செய்வது? தர்மசங்கடத்தில் ராகுல்

எந்த தொகுதியை ராஜினாமா செய்வது? தர்மசங்கடத்தில் ராகுல்

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி் பெற்றார். அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க ராகுல்  இன்று   கேரளா வந்தார். இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு  அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தவாறு ராகுல்காந்தி சென்றார்.அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

எடவண்ணாவில் நடந்த பொதுமக்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

தாயின் மறைவிற்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார். நான் எந்த முடிவும் எடுப்பதில்லை, என்னை பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக கூறினார். அவர் கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்குமாறு மோடியின் பரமாத்மா கூறுகிறது. நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல. ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாட்டின் எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன். எந்த தொகுதி எம்.பி.யாகதொடர்வது என்பதை முடிவு செய்ய தர்மசங்கடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!