Skip to content

உரிமை கோரப்படாத 26 உடல்கள்…… நல்லடக்கம் செய்த நேசக்கரம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை காவல் சரகம் முழுவதிலும் இருந்து ஆங்காங்கே ஆதரவின்றி உடல் நலிவுற்று உயிர் இழந்து கிடந்த உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவின்றி சிகிச்சை பெற்ற நோயாளிகள் இறந்த பின்னரும் அவர்களது உடலை உரிமை கோரி யாரும் வராத நிலையில், அந்த உடல்களும் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 26 உடல்களின் நல்லடக்கம் தஞ்சை ராஜகோரி மயானத்தில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட காவல்துறை, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை மாநகராட்சி ஒருங்கிணைத்து நேசக்கரம் என்கின்ற தன்னார்வ அறக்கட்டளை இந்த உடல் அடக்க பணியை செய்து முடித்தது.

அத்தகைய உரிமை கோரப்படாத உடல்கள் அனைத்தையும் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழியில் இறக்கி, வைக்கப்பட்டது. பின்னர், புதைக்கப்பட்ட இடத்தில் மலர் பரப்பி, குடும்ப உறுப்பினர் ஒருவர் இறக்கும் போது செய்கின்ற பால் தெளிப்பு உள்ளிட்ட அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தனர். ஆதரவற்ற உடல்கள் என்பது வாழ்வின் கொடுமை அதனை அடக்கம் செய்வது சமூக கடமை என்கின்ற நோக்கத்தோடு, நேசக்கரம் அமைப்பினர், தொடர்ச்சியாக ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்யும் பணியை கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா தொற்று தொடங்கிய காலகட்டத்தில் இருந்து செய்து வருவதாகவும், இதுவரை 350 க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளதாகவும், இதற்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காவல்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், நேசக்கரம் அமைப்பினர் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!