மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை தொடர்ந்து திறக்கப்படும்.
இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகத்துக்கும் சேர்த்து சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை வழங்கி வருகிறது. பருவமழை தவறிய நிலையில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீரும் முழுமையாக கிடைக்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குறுவைக்கு தண்ணீர் திறக்க வேண்டுமானால் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாக இருக்க வேண்டும். அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்க வேண்டும். கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருக்க வேண்டும். இந்த 3 காரணங்களின் அடிப்படையில் ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.71 அடியாக உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் குறிப்பாக குடகு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் பலமாக பெய்யவில்லை. எனவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த அளவிலேயே உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 404 கனஅடி தண்ணீர் வருகிறது. குடிநீருக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை 1934ம் ஆண்டு திறக்கப்பட்டது. அணையின் 91 ஆண்டு கால வரலாற்றில் ஜூன் மாதம் 12-ந்தேதி திட்டமிட்டப்படி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலையானது கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை (2011-ம் ஆண்டு தவிர) தொடர்ந்து 9 ஆண்டுகள் கால தாமதமாகவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.கடந்த 4 ஆண்டுகள் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதியில் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடையாவிட்டால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்க பருவமழை 100 சதவீதம் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் காலம் ஆகும். எனவே இனி வருங்காலங்களில் மழை பொழிவு ஏற்பட்டு ஆகஸ்ட் மாத வாக்கில் மேட்டூர் அணைக்கு அதிக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே குறுவைக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என டெல்டா விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.