ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டு அதன் தலைநகரமாக ஹைதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.
பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என உத்தரவிட்டார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அந்த உத்தரவை அவர் திரும்பப்பெற்றுக் கொண்டார். தற்போது அமராவதி ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நாளை ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு, அம்மாநில தலைநகர் குறித்துகூறியதாவது: மூன்று தலைநகர், நான்கு தலைநகர் என வஞ்சக செயல்களால் மக்களோடு விளையாட மாட்டோம். அமராவதி தான் எங்களின் தலைநகர். ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி தான் இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை. அதேநேரம், விசாகப்பட்டினம் மாநிலத்தின் வர்த்தக தலைநகராக இருக்கும் என்றார் சந்திரபாபு நாயுடு.