Skip to content

தஞ்சை… கடத்தப்பட்ட 5 மாத குழந்தை… 2 மணி நேரத்தில் மீட்பு…

  • by Authour

 

தஞ்சை மாவட்டம்  பூதலூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆந்திராவைச் சேர்ந்த திலீப், அவரது மனைவி ஷோபா ஆகியோர் தங்களின் 5 மாத குழந்தை மணிகண்டாவுடன் ரயிலில் கீ செயின் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் இதே ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பார்மில் படுத்து உறங்குவது வழக்கம். பின்னர் காலையில் எழுந்து வழக்கம் போல் ரயிலில் கீ செயின் விற்பனை செய்வார்கள்.

நேற்று இரவு வழக்கம் போல் ஸ்டேஷனில் பிளாட்பார்மில் படுத்து உறங்கினர். அருகில் தங்களின் குழந்தை மணிகண்டாவையும் படுக்க வைத்து இருந்தனர்.  அதிகாலை 3. 30 மணியளவில் ஷோபா எழுந்து பார்த்தபோது அருகில் படுக்க வைத்திருந்த குழந்தை மணிகண்டாவை காணாமல் அதிச்சி அடைந்தார். உடனே அவர் தனது கணவர் திலீப்பை எழுப்பி விபரம்  கூறினார். இதையடுத்து இருவரும் ரயில்வே ஸ்டேஷனில் பல இடங்களில் குழந்தையை தேடினர். குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

உடனடியாக இதுகுறித்து பூதலூர் போலீசில் திலீப் புகார் தெரிவித்தார். உடன் சம்பவ இடத்திற்கு பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சரவணன், தனசேகரன், தியானேஸ்வரன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பல பகுதிகளுக்கும் சென்று பூதலூர் போலீசார் குழந்தையை தேடி பார்த்தனர். இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் பல இடங்களிலும் தேடி பார்த்தபோது ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் மேற்கு பகுதியில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது.

அந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சென்று பார்க்கும் பொழுது குழந்தை அங்கு கிடந்தது.  ஆனால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் காலை 6 மணி அளவில் போலீசார் ஒப்படைத்தனர். சுமார் 2 மணி நேரத்திலேயே கடத்தப்பட்ட குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாரை பூதலூர் மக்கள் வெகுவாக பாராட்டினர்.

குழந்தையை யார் கடத்தியது, ஏன் கடத்தினார்கள்,  கடத்தி்யவர்கள் குழந்தையை  ஏன் விட்டு விட்டு போய்விட்டனர் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரிக்கி்றார்கள். இது குறித்து  அந்த ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!