புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மேலும் செல்வராணி ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கப்பட்ட மூதாட்டி செந்தாமரையின் பேத்தி பாக்கியலட்சுமி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் கழிவுநீர் வடிகால் உள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த மூதாட்டி இன்று காலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது கழிவுநீர் வடிகாலிலிருந்து கசிவு வெளியானதன் காரணமாக விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.
அவரை காப்பாற்ற சென்ற மூதாட்டியின் மகளும் விஷவாயு மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய இருவரை கண்ட மூதாட்டியின் பேத்தியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூதாட்டி செந்தாமரை மற்றும் அவரது மகள் காமாட்சி ஆகியோர் உயிரிழந்த நிலையில் பேத்தி பாக்கியலட்சுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் விஷவாயு புதுநகர் பகுதி முழுவதும் பரவியது. இதன் காரணமாக செல்வராணி என்பவரும் திடீரென மயங்கி விழுந்தார். அவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த செல்வராணியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அப்பகுதியில் வீடுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளதால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விஷவாயு பரவல் தொடர்பாக போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.