பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது மாதவிடாய் வலி. கேரளாவிலேயே முதன்முறையாக கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தங்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை அறிவித்திருக்கிறது. அதாவது, வருகைப் பதிவில் (Attendance) 2 சதவீதத்தை மாதவிடாய் விடுமுறைக்காக மாணவிகள் எடுத்துக் கொள்ளலாம். கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 75 சதவீதம் வருகை இல்லையென்றால், செமஸ்டர் தேர்வை மாணவர்கள் எழுத முடியாது. மருத்துவ சான்றிதழ் எத்தனை நாட்கள் குறைந்திருக்கிறதோ அதற்காக மருத்துவ சான்றிதழை துணைவேந்தரிடம் அவர்கள் சமர்ப்பித்து அதற்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அவர்களால் தேர்வு எழுத முடியும். ஆனால், இனி இந்த பல்கலைக்கழக மாணவிகளுக்கு 73 சதவீதம் வருகை இருந்தால் மீதமுள்ள 2 சதவீதத்திற்காக அவர்கள் மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. விடுமுறைக் கடிதம் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலையிலும் இந்த விடுமுறை அமல்படுத்தப்படும் என கேரள அரசு தற்போது அறிவித்துள்ளது.