தமிழகம் முழுவதும் நேற்று குரூப் 4 தேர்வு நடந்தது. 6244 காலி பணிகளுக்கு நடந்த இத் தேர்வை 15.88 லட்சம் பேர் எழுதினர். இதனால், ஒரு பணியிடத்திற்கு 254 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனிச் செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியது.
இதனால் 20 லட்சத்து 37,101 பேர் விண்ணப்பித்தனர். இதில் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுத அனுதிக்கப்பட்டனர். குரூப் 4 எழுத்து தேர்வு நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் 7247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
எழுத்து தேர்வில் பகுதி 1ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பகுதி 2ல் பிரிவில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என 100 வினாக்களும், ஆக மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது.குரூப் 4 தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுதியதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 4 லட்சத்து 47ஆயிரத்து 90 பேர் தேர்வு எழுத வரவில்லை.