நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது. பின்னர் பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்தது. தொடர்ந்து இரண்டாவது நாளான புதன்கிழமையும் தேவா்சோலை பகுதியில் உள்ள தேவன் எஸ்டேட் சாலையில் நடமாடியது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். பின்னர் சிறுத்தையை பிடிப்பதற்காக இரண்டு தானியங்கி கேமராக்கள் மற்றும் இரண்டு கூண்டுகள் வனத்துறையினர் வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்தப் பகுதியில் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்க்கும் போது சிறுத்தை கூண்டில் சிக்கி இருந்தது தெரியவந்தது. வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் சிறுத்தையை ஆய்வு செய்தனர். சிறுத்தை காயம் அடைந்த நிலையில் இருந்ததால் சிகிச்சைக்காக முதுமலை தெப்பக்காடு கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு செல்ப்பட்டது. அதன் காயத்தை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சிறுத்தையை வெளியில் விடுவதா அல்லது தொடர்ந்து சிகிச்சை அளிப்பதா என்பது பற்றி முடிவு செய்ய உள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை பயத்தால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டதுடன் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் பணிக்கு செல்லாமல் அவதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வனத்துறையினருக்கு தங்களின் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.