அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும். தி.மு.க.வை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். தி.மு.க.வை வீழ்த்துவதே எங்கள் எண்ணம். அதே நேரத்தில் அ.ம.மு.க. போட்டியிடுவது குறித்து 27-ந்தேதி அறிவிப்பேன். நான் பெரியகுளம், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறேன்.இடைத்தேர்தலில் போட்டியிட தயங்கவில்லை. போட்டியிடவும் தயாராக இருக்கிறேன். இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு பொதுவாக மக்கள் வாக்களிப்பார்கள். தி.மு.க.விற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. தொகுதியில் திட்டப் பணிகள் தொடர்வதற்கு உதவியாக இருக்கும் என்று வாக்களிப்பது வழக்கம். இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்ற மக்கள் தீர்ப்பும் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டால்தான் இரட்டை இலை கிடைக்கும். தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இலை முடக்கப்படும். இரட்டை இலை இருந்ததால்தான் அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. தனித்து போட்டியிட்டால் எடப்பாடி பழனிசாமி பணபலத்தை நம்பிதான் நிற்பார். கஜனிமுகமது மனநிலையை பெற்றவர்கள் நாங்கள். அதனால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.