தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இன்று நவீன்பட்நாயக் நிருபர்களிடம் பேசுகையில் ‘வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. ஒடிசா மக்கள் அதனை முடிவு செய்வார்கள். வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிஷ்டவசமானது. கடந்த 10 ஆண்டுகளாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே. பாண்டியன் கடுமையான உழைப்பாளி. கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது. தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்களின் கையில் உள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளது. கடும் வெயிலும் ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.