கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்ததால் ஆழியார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து அணைப்பகுதியில் பாறைகள் தென்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை மற்றும் லேசான மழையும் அவ்வப்போது பொழிந்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்து காணப்படுகிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 78.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 174 கன அடி நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 32கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் கேரளாவின் சில பகுதிகள் ஆழியார் அணையில் இருந்து கிடைக்க பெறும் நீரின் மூலம் பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.