தஞ்சைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாவல் பழங்கள் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த ஆண்டு நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நாவல் பழம் சீசன் ஆகும். தற்போது சீசன் தொடங்கியதையடுத்து தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் நாவல் பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நாவல் பழம் மருத்துவ குணம் கொண்டதால் பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவது நல்லது. கல்லீரல் கோளாறுகள், குடல் புண் ஆகியவற்றுக்கும் மருந்தாக உள்ளது. இதேபோல் நாவல் மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை. நாவல் மரத்தின் விதைகளை பொடி செய்து சாப்பிட வயிற்றுப் போக்கை நீக்கும், ரத்தப் போக்கை தடுக்கும், ஆஸ்துமாவை குணப்படுத்தும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும், உணவு செரிமானத்துக்கும் உதவும். சாலையோரங்களில் விற்பனைக்காக நாவல் பழங்கள் குவித்து வைக்கப்பட்டும் தள்ளு வண்டிகளிலும் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. ஒருகிலோ நாவல் பழம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணம் உள்ளதால் நாவல் பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.