சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் 240 தொகுதிகளை மட்டுமே அந்த கட்சியால் கைப்பற்ற முடிந்தது.
அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்சியமைக்க தேவையான 272-க்கு அதிகமான உறுப்பினர்களைஇந்த அணி பெற்றதால் அடுத்த 5 ஆண்டு களுக்கு கூட்டணி ஆட்சி நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது.
மறுபுறம் பா.ஜனதாவுக்கு எதிராக களமிறங்கி இருந்த இந்தியா கூட்டணியும்234 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. அத்துடன் மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்புகளையும்பரிசீலித்து வந்தது. எனவே எதிர்க்கட்சிகளுக்கு அந்த வாய்ப்பை அளிக்காமல் மீண்டும் மத்தியில் ஆட்சியை உறுதி செய்யும் நோக்கில், புதிய அரசு அமைப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சியமைக்க தங்கள் ஆதரவை அளித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை ஒரு மனதாக அவர்கள் தேர்வு செய்தனர். இதற்கிடையே புதிய மந்திரி சபையில் யார் யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து இந்த கட்சி தலைவர்களிடையேபேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகளாக கருதப்படும் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய 2 கட்சிகளும் முறையே 16 மற்றும் 12 எம்.பி.க்களை வைத்திருக்கின்றன. எனவே கூட்டணி ஆட்சியை சுமுகமாக தொடர்வதற்கு இந்த இரு கட்சிகளின் ஆதரவும் பா.ஜனதாவுக்கு முக்கியமானதாகும்.
இந்த பரபரப்பான சூழலில் பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். இதில் தங்கள் கூட்டணி தலைவராக (பிரதமர்) மோடி தேர்வு செய்யப்படுகிறார். அதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி , ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார். அப்போது, தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் மோடி வழங்குகிறார். அத்துடன் புதிய அரசுஅமைப்பதற்காக உரிமையும் கோருகிறார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடியை புதிய அரசு அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு9ம் தேதி மாலை பதவியேற்கிறது.
இந்த பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்குப்பின் மோடியும் தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகிறார்.