நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில் டில்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சி.ஐ.எஸ்.எப்) பெண் காவலர் குல்வீந்தர் கவுர், கங்கனாவை நோக்கி வேகமாக சென்றார்.
திடீரென பெண் காவலர் குல்வீந்தர் கவுர், கங்கனாவின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத கங்கனா அதிர்ச்சியில் உறைந்தார். அவருடைய உதவியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் காவலர் கவுரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கங்கனா தனது சமூகவலைதள பக்கத்தில் தான் தாக்கப்பட்ட தகவலை பகிர்ந்தார். இஇதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். பணியை சரிவர செய்யவில்லை, எம்.பியை தாக்கி உள்ளார் என்ற காரணங்களுக்காக கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கங்கனாவை அறைந்தது ஏன்? என பெண் காவலர் குல்வீந்தர் கவுர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
அதில் அவர் “ரூ.100 அல்லது ரூ.200 கொடுக்கப்பட்டதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கங்கனா கூறினார். டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் என் அம்மாவும் ஒருவர்” என கூறியுள்ளார். இவரின் இச்செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டியே வருகின்றனர்.